தமிழர்கள் இடதுசாரிகளா வலதுசாரிகளா?
ஒருவரின், ஒரு சமூகத்தின் அரசியல் நிலைப்பாட்டை வகைப்படுத்துவதில் இடது வலது கருத்துரு பயன்படுகிறது. இந்த இரு எதிர் நேர்ம துருவ நிலைகளுக்கு அப்பாலும் பல கொள்கை நிலைகள் இருக்கின்றன என்றாலும், இடது வலது கருத்தாடலே பலமாக நிகழ்கின்றது. பல சிக்கல்களை இடது வலது கட்டமைப்பை வைத்து விளங்கிக் கொள்ளவும் முடியாது, தீர்த்துக் கொள்ளவும் முடியாது. எனினும் தமிழர்கள் இந்த துருவ நிலையில் எங்கே நிற்கிறார்கள் என்பது அலசப் பட வேண்டிய விடயம். இது உடனடியாக பட்ட சில சிந்தனைகள்.
இடது சாரிக் கொள்கை அரசு பலமாகவும், அதிகாரம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு ஆகும். அதாவது பெரும்பாலான பொருளாதார சொத்துக்கள், செயற்பாடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் எனபதாகும். இந்த கட்டமைப்பே எல்லோருக்கும் கூடிய சமத்துவம் மிக்க பொருளாதார பலங்களை, சமூக நீதியைத் தரும் என்று வேண்டுகிறது. வலது சாரிக் கொள்கை அரசு சிறிதாவும் தனியார் சுதந்திரம், சொத்துரிமை விரிவாகவும் அமைய வேண்டும் என்று வேண்டுகிறது. தனியார் செயற்பாடு, சொத்துரிமை தொழில் முனைவையும், தொழில் விருத்தியையும் ஏதுவாக்கி, முயற்சி செய்பவர் அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க மிக சிறந்த வழி என்பது வலது சாரி நிலைப்பாடு. பல சமூக கொள்கைகளில் (எ.கா தற்பாலர் உரிமைகள், பெண்கள் உரிமைகள்) இடது சாரிகள் சார்பு நிலைப்பாட்டையும், வலது சாரிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், பிற நாடுகளிலும் தமிழர் அரசியல் கட்சிகள் எல்லா விடயங்களிலும் தெளிவான இடது வலது சார்பை கொண்டிருக்க வில்லை. எனினும் பொருளாதார தளத்தில் பெரும்பான்மை தமிழ் கட்சிகள் வலது சாரிக் கொள்கை உடையவை. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் பல சமூக விடயங்களில் இடது சாரி சார்பையும், பொருளாதார விடயங்களில் வலது அல்லது கலப்பு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன. மேற்குநாடுகளிலும் பார்க்க தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு என அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது இந்தக் கொள்கையின் விளைவு ஆகும். இலங்கைத் தமிழர் கட்சிகளும், இயக்கங்களும் ஒரு சில வற்றைத் தவிர வலது சாரி சார்பைக் கொண்டவையே. குறிப்பாக இன்றைய ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் போன்றவை வலது சாரிக் கட்சிகள் ஆகும்.. கனடாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக பொருளாதார வலது சாரிக் கட்சியான லிபிரல் கட்சிக்கே வாக்களிக்கின்றார்கள். எனவே தமிழர்கள் பெரும்பான்மையாக வலது சாரி பொருளாதார கொள்கையைக்கே சார்பாக உள்ளார்கள் எனக் கொள்ளலாம்.
தமிழர்கள் ஒற்றுமை அற்றவர்கள், ஒத்துளைத்து செயற்படாதவர்கள் என்ற கூற்றை சற்று நோக்கினால், அதிலும் தமிழர்களின் வலது சாரி போக்கைக் காணலாம். தனிமனிதத்துவம், தொழில் முனைவு, போட்டி போன்றவற்றுக்கு தமிழர்கள் கூடிய மதிப்புத் தருகிறார்கள்.
அரசியல் தளத்தில் தமிழர்களின் இந்தப் போக்கைப் முற்றிலும் புரிந்து கொள்ளாமல் செயற்பட முனைந்த இடதுசாரி இயக்கங்கள் எப்போது சிற்றளவும் வெற்றி பெறவில்லை. இடது சாரி சார்பை சமூக தளத்த்தில் எதிர்பார்த்து இயங்கிய ஈழ இயக்கங்களும் ஆதரவு அற்று அழிந்து போயின.
இலக்கிய தளத்தில் சில புலமையாளர்கள், சிற்றிதழ்கள் மட்டும் பொதுவுடமை, சமவுடமை என்று அறை கூறுகின்றன. ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் வாசிப்பது குமுதம், ஆனந்த விகடன் போன்ற வலது சார்பு இதழ்களை பத்திரிகைகளை ஆகும்.
இடதா வலதா சரியானது என்பது வேறு ஒரு வாதம். ஆனால் "மக்கள்" "மக்கள்" என்று கூறி, அவர்கள் இடது சாரி கொள்கைகளை விரும்புகிறார்கள் என்பது போல் பலர் எழுதுவது உண்மையற்றது. இடது சாரிக் கொள்கை மக்கல் கூடுதலாக விரும்ப வேண்டும் என்று நாம் விரும்பினாலும், அதை இன்று அவர்கள் அவற்றை விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியல்ல. மேலும் பலமான இலங்கை இந்திய மலேசிய அரசுகளாலேயே தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற வரலாற்று நினைவையும் நாம் மனதில் வைக்க வேண்டும். இந்தக் கொள்கைகளை மீறி புறவய, தரவு அடிப்படையிலான அறிவியலை, கருவிகளை, தீர்வுகளை நாம் கண்டடைய வேண்டும்.